Wednesday, February 10, 2016



தொலைக்காட்சியில் திருக்குறள்.

இன்று தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா சென்ற ஆண்டு பதிவு ஒன்றை யூடியூப் பதிவில் இன்று பார்த்தேன். திருக்குறள் பற்றிய பதிவு அது. http://www.hotstar.com/1000052356

திருக்குறள் என்றவுடன் 60 வயதைக் கடந்தோர் இருப்பார்களோ என்ற பொதுவான சிந்தனையைத் தகர்த்து இளைஞர்களும் மத்திய வயதினரும் வந்து கலந்து கொண்ட நிகழ்வு இது. இதில் பல விசயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.

தமிழ் இளைஞர்கள் தமிழ் பேசத் தயங்குவர் என்ற கருத்தை மாற்றிப் போட்ட வகையில் அமைந்தது இந்த நிகழ்ச்சி. பேசிய இளைஞர்கள் ஒருவர் கூட நாடகத் தமிழிலோ ஆங்கிலம் கலந்த தமிழிலோ பேசாது இனிமையான தமிழில் பேசியது மனதிற்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது.  

வந்திருந்த பலர் திருக்குறளை ரசித்து ரசித்து அதன் பொருள் அறிந்து உணர்ந்து சொன்னார்கள். திரு.மகுடேசன் என்பவரது உணர்வுப்பூர்வமான விளக்கமும், தாம் ஒரு விவசாயி எனக்குறிப்பிட்டு பேசியவரின் இயல்பான கருத்துக்களும் என்னை மிகக் கவர்ந்தன. 

திருக்குறளுக்கு அபிநயம் செய்த இளம்பெண் அவையிலுள்ளோர் குறிப்பிட்டுச் சொன்ன குறளுக்கு நல்ல முறையில் அபிநயம் பிடித்தார். 

அரங்கில் பேசியவர்களில் ஏறக்குறைய எல்லோருமே குறிப்பிட்ட குறள் ஒவ்வொன்றும், அதன் விளக்கங்களும், அதனை குறிப்பிட்ட வகையும் கேட்போர் சிந்தனையைக் கவரும் தன்மையில் இருந்தன. இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு நிகழ்ச்சி என்று மனதிலேயே பாராட்டிக் கொண்டேன். 

​தமிழ் அழியக்கூடிய மொழி என சிலர் கூறி ​வருந்தி வருகின்றனர். என்னைக் கேட்டால் தமிழ் இன்று மேலும் புதிய பரிமாணத்தில் செழிப்பாக வளர்ந்து வருகின்றது என்றே கூறுவேன். இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் இதற்கு ஒரு சான்று.